சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வழங்கப்பட்ட நியமனத்தை முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நிராகரித்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா விவசாய அமைச்சின் செயலாளராக சிறிலங்கா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் இடையில் காணப்பட்ட முரண்பாடுகளை அடுத்து, மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா அண்மையில் பதவியில் இருந்து விலகியிருந்தார்
இந்த நிலையில், மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவுக்கு, வன உயிரினங்கள் மற்றும் வனங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை வழங்க சிறிலங்கா ஜனாதிபதி முன்வந்திருந்தார்.
புதிய பதவிக்கான நியமனக் கடிதம், கடந்த 23ஆம் நாள் ஜனாதிபதியின் செயலாளரினால் ஒப்பமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட போதும், மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா அதனை நிராகரித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.