நேபாளத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு செல்லுபடியாகாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நேபாளத்தில், பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புஷ்ப கமல் பிரசந்தா தலைமையிலான மாவோயிஸ்ட் சார்புடைய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன, 2017 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, இரு கட்சிகளும் இணைக்கப்பட்டு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயரிடப்பட்டது.
இந்த பெயர் மற்றும் அதனை பதிவு செய்த தேர்தல் ஆணையத்திற்கு எதிராக, நேபாள உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதே பெயரில் ஏற்கனவே தாம் ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், புதிதாக இணைக்கப்பட்ட சர்மா ஒலி, புஷ்ப கமல் கட்சியின் பெயர் பதிவை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை விசாரணையின் முடிவில், மனுதாரர், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதால், மற்றொரு கட்சி அதே பெயரை பதிவு செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே, சர்மா ஒலி மற்றும் புஷ்பகமல் ஆகியோரின் கட்சிகள் ஒருங்கிணைப்பு ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் மீண்டும் கட்சிகளை இணைக்க விரும்பினால், தேர்தல் ஆணையத்தில் முறைப்படி விண்ணப்பித்து உரிய விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.