வடக்கு மாகாணத்தில் மேலும் நான்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று 457 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, மன்னார் பொது மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன், மன்னாரில் நேற்றுக் காலை தொடருந்துடன் மோதி உயிரிழந்த 58 வயதுடைய நபருக்கும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி அக்கராயன்குளத்தில் இரண்டு பேருக்கும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர் என்றும், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.





