கொரோனா தொற்றை அடுத்து, சிறிலங்கா போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
காரைநகர் சாலையில் பணியாற்றும் 3 சாரதிகள், 3 நடத்துனர்கள் மற்றும் 2 காப்பாளர்கள் என எட்டு பேருக்கு, நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
காரைநகர் சாலை பணியாளர்கள் 90 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போதே, இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, காரைநகர் சாலையில் இருந்து சேவையில் ஈடுபடும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் இன்று இடம்பெறவில்லை.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், மெலிஞ்சிமுனை தொற்றாளர்களுடன் தொடர்புடைய 9 பேருக்கு, நேற்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், எற்கனவே கண்டறியப்பட்ட தொற்றாளருடன் தொடர்பில் இருந்த இருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சிற்றூழியர் ஒருவருக்கும், யாழ்ப்பாணம் காகில்ஸ் கட்டடத் தொகுதியில் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் ஒருவருக்கும், சாவகச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.





