ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள தீர்மான வரைவு நாளை இறுதிப்படுத்தப்படும் என்று ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான வரைவை பிரித்தானியா தலைமையிலான ஆறு நாடுகள் முன்வைத்துள்ளன.
இந்த வரைவு தற்போது உள்ளக ஆய்வுகளுக்கும், முறைசாரா கலந்துரையாடல்களின் போதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதில் மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டு கடுமையாக்கப்பட வேண்டும் என்று ஸ்கண்டிநேவிய நாடுகள், வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா அரசாங்கம் இந்த வரைவை ஏற்கனவே நிராகரித்துள்ள நிலையில், அனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் நேற்று மூன்றாவது முறைசாரா கலந்துரையாடல் மெய்நிகர் முறையில் இடம்பெற்றது.
மேலும் ஒரு முறைசாரா கலந்துரையாடல் நாளை நடத்தப்படவுள்ளது.
இதற்குப் பின்னரே, தீர்மான இறுதி வரைவு தயாரிக்கப்பட்டு, நாளை மறுநாள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரைவையில் இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.
புதுடெல்லியில் இருந்து நேற்று வரை கொழும்புக்கு சாதகமான பதில் ஏதும் கிடைக்காத நிலையில், சிறிலங்கா வெளியுறவு அமைச்சு குழப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





