சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் புதிய தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென்று ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவியொருவர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவி சொன்ந்ரா ஆர்.பி. என்டன், 22 அமைப்புகளின் கையொப்பத்துடன் ஐநாவுக்கு இந்தக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
சிறிலங்காவின் உள்ளக நீதி மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கான வாய்ப்புகள் முழுமையாக மங்கியுள்ளதாகவும் மாணவியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆட்சியின் கீழ் சிறிலங்காவில் மனித உரிமை விடயங்கள் மோசமடைவதற்கான அபாயங்கள் இருப்பதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச நிகழ்ச்சி நிரலில் இருந்து சிறிலங்கா வெளியேறாது என்பதை உறுதிப்படுத்தி, எதிர்காலத்தில் துஷ்பிரயோகங்கள் நடைபெறுவதைத் தடுப்பதாக ஐ.நா. தீர்மானம் அமைய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா உட்பட உலக நாடுகளில் பொறுப்புக்கூறல் இல்லாததால், இன- தேசியவாத அலை வளர்ந்து வருவதாகவும், சிறுபான்மையின மக்கள் துன்புறுத்தப்படுவதாகவும் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள தோமஸ் பெக்கர் தெரிவித்துள்ளார்.