தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் அடுத்தவாரம் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று, அமெரிக்காவின் ஒக்லண்ட் பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பாளர் அனுராதா மிட்டலுடனான நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
முன்னாள் ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உள்ளிட்ட பலரும் பங்கெடுக்கவுள்ள இந்த கலந்துரையாடலில், அனைத்து மட்டங்களிலும் இருந்து மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மெய்நிகர் கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட ஒக்லண்ட் பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பாளர் அனுராதா மிட்டல்,
போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும் வடக்கில் இன்னமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகளை சிறிலங்கா இராணுவம் தன்வசம் வைத்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமது ஆய்வறிக்கை அமெரிக்க அரசிற்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கும், இணை அனுசரணை நாடுகளிற்கும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தை தமிழ் மக்கள் தொடர வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர் ஊடகவியலாளர்கள் தமது பணியை தளராமல் முன்னெடுக்குமாறும் கோரியுள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணியின் வெற்றியானது சர்வதேசத்திற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருப்பதாக தெரிவித்த அனுராதா மிட்டல், அதனை முன்னின்று செயற்படுத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் வேலன் சுவாமிகள் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஊடகவியலாளர்களும் பங்கெடுத்திருந்தனர்.