இந்திய கடற்பரப்பில் படகு ஒன்றில் இருந்த மன்னாரைச் சேர்ந்த இரண்டு மீனவர்களை தமிழக கடலோர காவல் படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு சொந்தமான உலங்குவானூர்தி, இந்திய- இலங்கை சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான முறையில் இந்திய விசைபடகுடன் நின்று கொண்டிருந்த இலங்கை படகு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
உலங்குவானூர்தி தாழ்வாக பறந்து கண்காணித்ததை அவதானித்த இந்திய படகு அங்கிருந்த தப்பி சென்ற நிலையில், இலங்கைப் படகு இந்திய கடற்படையிடம் சிக்கியுள்ளது.
இந்திய கடற்படையினர், படகில் இருந்த 2 பேரையும் தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு செல்லும் படி உத்தரவிட்டு, கரைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார்- பேசாலை பகுதியை சேர்ந்த அருள் குரூஸ், ரேகன் பாய்வா என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.