பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த வேதனத்தை நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியை அமுலாக்காத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், நேற்று முன்தினம் இரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த வர்த்தமானியை அமுலாக்குவதற்கு அனைத்து பெருந்தோட்ட நிறுவனங்களும் இணங்கியுள்ளதாக ஊடகங்களின் மூலமாக தெரிவித்துள்ளதென தொழில் ஆணையாளர் பிரபாத் சந்ரகீர்த்தி குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் உத்தரவின் அடிப்படையில் செயற்படுவதாகவும் நிறுவனங்கள் அறிவித்துள்ளதாகவும்
எவ்வாறிருப்பினும், இந்த வர்த்தமானியை அமுலாக்காத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வேதன நிர்ணய கட்டளை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த தரப்பினருக்கு எதிராக அபாரதமோ அல்லது 6 மாதகால சிறைத் தண்டனையோ விதிக்க முடியும் என தொழில் ஆணையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில், தொழிற்சங்கங்களும், பெருந்தோட்ட நிறுவனங்களும் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வரலாம் என அவர் குறிப்பிட்டார்.
கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் தமக்கு அறிவித்துள்ளமையினால், அதனை இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஒரு மாதத்திற்குள் வெளியிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.