சிறிலங்காவுக்கு, 150 கோடி டொலர் நாணய மாற்றுக் கடனை வழங்குவதற்கு, சீனா அனுமதி அளித்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
10 பில்லியன் யுவானை சிறிலங்கா மத்திய வங்கிக்கு கடனாக வழங்குவதற்கு சீன மக்கள் வங்கி அனுமதித்துள்ளதை மகிழ்ச்சியுடன் உறுதிப்படுத்துவதாக அவர் கீச்சகப் பதிவில் கூறியுள்ளார்.
இரண்டு நாடுகளினதும் மத்திய வங்கிகளுக்கு இடையில் பல மாதங்களாக நீடித்த பேச்சுக்களை அடுத்தே, இந்த கடனுக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில், 370 கோடி டொலர் கடனை சிறிலங்கா மீளளிப்பு செய்ய வேண்டியுள்ள நிலையில், சிறிலங்காவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு, 460 கோடி டொலராக குறைந்துள்ளது.
இந்தநிலையில் சீனாவிடம் இருந்து கிடைக்கும் 150 கோடி டொலரின் மூலம், சிறிலங்காவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை ஓரளவுக்கு பாதுகாக்க முடியும் என்று மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.