சிறிலங்காவுக்கு எதிரான ஜெனிவா தீர்மான வரைவில் திருத்தங்களைச் செய்வதில், இந்தியா திரைமறைவில் இருந்து செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை பிரித்தானியா உள்ளிட்ட 6 நாடுகள் முன்வைக்கவுள்ளன.
தீர்மான வரைவுகளை பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் என்ற நிலையில், நேற்றும், இந்த வரைவை இறுதி செய்வதற்கான நான்காவது முறைசாரா கலந்துரையாடலை அனுசரணை நாடுகள் நடத்தியிருந்தன.
இந்த முறைசாரா கலந்துரையாடல்களின் போது, இந்தியா பகிரங்கமாக எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.
எனினும், திரைமறையில் இந்த வரைவில் மாற்றங்களைச் செய்வதில் இந்தியா தீவிரமாக செயற்பட்டதாக இந்திய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான வார்த்தைகளைக் கொண்ட தீர்மானம் முன்வைக்கப்படுவதை இந்தியா தவிர்க்க விரும்புவதாகவும், கூறப்படுகிறது.
நாடு ஒன்றில் நேரடியாகத் தலையீடு செய்யும் வகையிலான கடுமையான வார்த்தைகள் வரைவில் இடம்பெறாமல் தவிர்க்கப்படுவதை, இந்தியா மற்றும் உள்நாட்டு மோதல்களை எதிர்கொள்ளும் பல நாடுகள் விரும்புகின்றன என்றும், அவ்வாறான நாடுகளுடன் இந்தியா ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்களை சேகரித்துப் பாதுகாக்கும் கட்டமைப்பை உருவாக்குவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு அழைப்பு விடுக்கும் வகையிலான பந்தியை நீர்த்துப் போகச் செய்வது குறித்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இந்தியா எடுக்கவுள்ள முடிவைப் பின்பற்றுவதற்கு, ஜப்பான், இந்தோனேசியா, பங்களாதேஷ், தென்கொரியா போன்ற நாடுகள் காத்திருப்பதாகவும், மற்றொரு தகவல் கூறுகிறது.