பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் தொழிலாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றுக்கு தமது நன்றிகளை கூறிக்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வேலை நாட்கள் குறைக்கப்படாமலும், தொழில் சுமைகள் அதிகரிக்கப்படாமலும் தமக்கு இந்த சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு அது தொடர்ந்தும் அமுலில் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அதேவேளை, ஆயிரம் ரூபாவை வழங்கிவிட்டு வேலை நாட்களில் கை வைத்தால் அதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் போராடிவரும் நிலையில் 6 ஆண்டுகளுக்கு பின்னரே அவர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.