பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதில் சிறிலங்கா அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தில் உரையாற்றிய அவர்,
“எமக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பில் நியாயத்தை கேட்டு நிற்கின்ற வேளையில், சர்வதேச விசாரணையை நடத்தக்கோரி நிற்கின்ற நிலையில், சர்வதேச விசாரணை அவசியமில்லை, உள்ளக விசாரணைகளில் தீர்வு காண்போம் எனக் கூறியவர்கள், இப்போது இந்த விடயத்துக்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கேட்கின்றனர்.
பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதிலும், தமது மக்களுக்கான நியாயத்தை, நீதியை நிலைநாட்டுவதிலும் சிறிலங்கா அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது.
அதனால் தான் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எமது மக்களுக்கு பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்பட வேண்டும் என நாம் தொடர்ச்சியாக 11 ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆரம்பித்த எமது கோரிக்கை இன்று வரை தொடர்கின்றது.
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை ஆராயவும் பொறுப்புக்கூறவும் வலியுறுத்துகிறோம்.
ஆனால் இன்றுவரை எமது குரலுக்கு நீதி கிடைக்கவில்லை.
எனினும் கிறிஸ்தவ மக்கள் உள்ளக விசாரணைகளால் நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளிலேயே சர்வதேச விசாரணையை கேட்கின்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
நாம் 11 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், எமது கோரிக்கையில் நியாயமில்லை என கூற எவருக்கும் இப்போது தகுதியில்லாது போய்விட்டது.
இந்த விடயத்தில் பேராயர் சர்வதேச விசாரணையை கேட்டுள்ளதை நாம் நிச்சயமாக வரவேற்போம். அவருக்கு நாம் ஆதரவை வழங்குவோம்,” என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.