மியன்மாரில் இராணுவ ஆட்சியாளர்களின் உத்தரவுகளைப் பின்பற்ற விரும்பாத காவல்துறை அதிகாரிகள் பலர், அங்கிருந்து தப்பி வந்து இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளுமாறு தங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், அதனை நிறைவேற்ற முடியாததன் காரணமாக தாம் இந்தியாவுக்கு தப்பி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மியான்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியால், அந்நாட்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மார் மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறைகளை இராணுவம் அதிகரித்துள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெறுகின்றன.
இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு, தடியடி போன்ற வன்முறைகளில் இதுவரை 50 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி 27 ஆம் திகதி மியன்மாரின் நகரம் ஒன்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு தமக்கு உத்தரவிடப்பட்டதாக தப்பி வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.