முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உதவி காவல்துறை அத்தியட்சகர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொழும்பில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அசாத் சாலி, பணம் இருந்தால் நான்கு பெண்களை திருமணம் செய்துகொள்வதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியிருந்தார்.
அத்தோடு, கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார் என்பதற்காக குர்ஆனில் உள்ள சட்டங்களை மாற்றிக் கொள்ள முடியாது என்றும் அவ்வாறு சட்டங்கள் மாற்றப்பட்டாலும் அதனை முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறைமையை சட்டங்களினால் மாற்றிவிட முடியாது. முஸ்லிம் ஆண் ஒருவர் தனது பண வசதிக்கு ஏற்ற வகையில் பெண்களை திருமணம் செய்து கொள்கின்றார். அதில் எவ்வித தவறும் கிடையாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
செல்வம் இருக்கும் ஓர் ஆண் வசதி குறைந்த சில பெண்களை திருமணம் செய்து அவர்களை பராமரிப்பதில் தவறில்லை. முஸ்லிம் சட்டங்களை மாற்றி தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். இனவாத அடிப்படையிலேயே இந்த சட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அசாத் சாலி குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





