தற்போது ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள வரைபில் நாங்கள் கேட்டுக்கொண்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்ற பொறிமுறை அவசியம் என்பதை வெளிப்படுத்தி இருந்தோம். பொறுப்புக்கூறல் விடயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும்.
மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் அதனைப் பாரப்படுத்துவதற்கு ஏதுவாக செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைதான் எங்களது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம்.
இந்த சபை சர்வதேச நீதிமன்றத்தில் எதனையும் பாரப்படுத்த முடியாது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஒவ்வொரு சபைக்கும் சில சில அதிகாரங்கள் இருக்கின்றன.
இந்த மனித உரிமை பேரவைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பாரப்படுத்தும் அதிகாரம் கிடையாது. அந்த அதிகாரம் பாதுகாப்பு சபையிடம் மாத்திரம்தான் இருக்கின்றது.
இதனை பல தடவை மக்களிடம் தெளிவுப்படுத்தினோம். நாங்கள் கூறியது பொறுப்புக்கூறல் விடயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து வெளியே கொண்டு வாருங்கள்.
செயலாளர் நாயகத்தின் ஊடாக பாதுகாப்பு சபைக்கு கொண்டுச் சென்று, பொதுச்சபை, பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறே கூறி இருக்கின்றோம்
மேலும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைபில் நாங்கள் கேட்டுக்கொண்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொறுப்புக்கூறல் இந்த பேரவையில் இருந்து வெளியே கொண்டு வரும் விடயம் தெட்ட தெளிவாக இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.