ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எந்த அநீதியும் இழைக்கப் போவதில்லை என்று, இந்தியா உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
முறைசாரா கலந்துரையாடலின் போதே, இந்தியத் தரப்பில் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அந்த உயர்மட்ட கலந்துரையாடலின் போது, இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பது குறித்து இந்தியா எதனையும் குறிப்பிடவில்லை என்றும் சிறிலங்கா அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகிக்கலாம் என்றே தகவல்கள் கூறுகின்றன.
நேற்று முன்தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொலைபேசியில் பேச்சு நடத்தியிருந்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, ஜெனிவா தீர்மானத்தை தோற்கடிக்க சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியப் பிரதமரின் ஆதரவைக் கோரியிருந்தார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.