பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு தீர்ப்பாயம் இந்த உத்தரவை விடுத்துள்ளதாகவும் இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீக்கப்படலாம் எனவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை 2001ஆம் ஆண்டில் பிரித்தானியா தடை செய்திருந்த நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த தடைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், பிரித்தானியாவில் பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்து வரும் கூட்டுப் பயங்கரவாத ஆய்வு நிலையம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாதத்தை இன்னமும் கைவிடவில்லை என்பதால் தடை தொடரவேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் , தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிப்பதற்கான காரணங்களில் குறைபாடுகள் உள்ளதால் உள்துறை அமைச்சர் தடை குறித்து மீளாய்வு செய்ய வேண்டுமென, தடைசெய்யப்பட்ட அமைப்புகள் குறித்த மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம் என்றும், மேன்முறையீட்டாளரின் இறுதிப் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்றும், அதுவரை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகவே விளங்கும் என்றும், பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.