வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“நேற்று 13 பேர், யாழ்ப்பாணத்திலும், வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர் என சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கும் நேற்று தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொது சுகாதார பிரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு பணியாற்றுவோருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையின் போதே, மேலும் 21 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.