ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, இதுவரை 40 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்காக, பிரித்தானியா உள்ளிட்ட ஆறு நாடுகள் இணைந்து, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான வரைவை சமர்ப்பித்துள்ளன.
ஆறு நாடுகள் இணைந்து சமர்ப்பித்த இந்த தீர்மான வரைவில், இணை அனுசணையாளர்களாக மேலும் பல நாடுகள் இணைந்துள்ளதாகவும், இதுவரையில் 40 நாடுகள் ஆதரவாக கையெழுத்திட்டுள்ளதாகவும் ஜெனிவா தகவல்கள் கூறுகின்றன.
பிரேரணையில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில், இந்தமுறை வாக்களிக்கும் உரிமை பெற்ற 12 நாடுகளும் அடங்கியுள்ளன.
இந்த தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கியுள்ள, வாக்களிக்கும் உரிமை பெற்ற நாடுகளில், மார்ஷல் தீவுகள் மற்றும் மலாவி ஆகியனவே, மேற்குலக நாடுகளின் பிரிவைச் சேராதவை என்றும் தெரியவருகிறது.
சிறிலங்கா அரசாங்கம் இந்த தீர்மான வரைவை நிராகரித்துள்ள நிலையில், சீனா, பாகிஸ்தான், கியூபா, பிலிப்பைன்ஸ், வெனிசுவேலா, ரஷ்யா ஆகிய ஆறு நாடுகள் மட்டுமே இதுவரை சிறிலங்காவுக்கு ஆதரவளிக்க வெளிப்படையாக இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.