சிங்கள- தமிழ் புதுவருட பண்டிகை காலத்தில், பயணத் தடைகளை விதிப்பது குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டில் கொரோனா தொற்று இன்னமும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்பதால் மக்களே தமது நடமாட்டங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
புதுவருட காலப்பகுதியில், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது முக்கியம்.
மக்களின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் கூறியிருந்தாலும், அரசாங்கம் அதுகுறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இரத்த உறைவு பற்றிய அச்சத்தை அடுத்து, சில நாடுகள் அஸ்ட்ரா ஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை இடைநிறுத்தியுள்ள போதிலும் சிறிலங்கா தொடர்ந்து அதனைப் பயன்படுத்தும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஒரு பகுதி மருந்துகள் தான் தடை செய்யப்பட்டுள்ளன. அவை சிறிலங்காவுக்கு வரவில்லை. எனவே பொதுமக்கள் பொய்யான வதந்திகளை நம்பி அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.