2020 ஆம் ஆண்டில் வாகன விபத்துகள் குறைவாகவே இருந்த போதும், விபத்துக்களினால் மிக அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு போன்றவற்றினால், கடந்த ஆண்டு வாகனப் போக்குவரத்து மிகவும் குறைந்திருந்தது.
இதனால், ஒன்ராறியோவில் 2019ஆம் ஆண்டை விட, 26 சதவீதம் விபத்துக்கள் குறைந்திருந்தன. எனினும், உயிரிழப்புகள் 2019ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு 22 வீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் 62 பேர் அதிக வேகத்தினாலும், 51 பேர் மதுபானம் அருந்திய நிலையில் வாகனம் செலுத்தியதாலும், 45 பேர் சாரதியின் கவனயீனத்தினாலும், 55 பேர் ஆசனப்பட்டி அணியாததாலும், விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.