பங்களாதேசின் சுதந்திர பொன்விழா கொண்டாட்டங்களின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்த வாய்ப்புகள் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இடம்பெறும் நிகழ்வுகளில் இந்திய, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்திப்பார் என்றும், ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு அவர், இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், இந்திய- சிறிலங்கா பிரதமர்கள் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையவே டாக்கா செல்லவுள்ளனர் என்றும் இருவரும் சந்திக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளை டாக்கா செல்கிறார். அவர் 19 ஆம் திகதி நிகழ்வுகளில் பங்கேற்று விட்டு நாடு திரும்புவார்.
அதேவேளை இந்தியப் பிரதமர் மோடி வரும் 25ஆம் திகதியே டாக்கா செல்லவுள்ளார். இதனால் இவர்களுக்கிடையிலான சந்திப்புக்கு வாய்ப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.