ரஷ்ய ஜனாதிபதி புடினை கொலையாளி என்றும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதற்கு உரிய விலை கொடுக்க போகிறார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்தை அடுத்து, அமெரிக்காவுக்கான தூதுவரை ரஷ்யா திருப்பி அழைத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் செல்வாக்கை குறைக்கவும், டிரம்பின் செல்வாக்கை அதிகரிக்கவும் ரஷ்யா முயன்றதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஒப்புதலுடன் தான் இது நடந்திருக்கும் என்றும், அந்தப் புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வி அளித்த அமெரிக்க ஜனாதிபதி பைடன், அமெரிக்க தேர்தல் தலையீட்டிற்கு புடின் உரிய விலையைக் கொடுப்பார் என்று கூறியுள்ளார்.
அத்துடன், புடினை கொலையாளி என நினைக்கிறீர்களா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, அப்படி தான் நினைக்கிறேன் என்றும் பைடன் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, வொஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதுவர் அனடோலி அன்ரனோவ் (Anatoly Antonov) உடனடியாக மொஸ்கோவிற்கு அழைக்கப்பட்டுள்ளப்பட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யவே அவரை அழைத்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.