ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்குமாறு, பங்களாதேஸ் நாட்டின் தலைவர்களிடம் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக, நேற்றுக்காலை டாக்காவைச் சென்றடைந்த சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்தில் வரவேற்றார்.
பின்னர், இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நேற்று பிற்பகல் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அப்துல் மூமனுடனும் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.
இதன் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பில் சிறிலங்காவுக்கு ஆதரவு அளிக்குமாறு மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும் டாக்கா தகவல்கள் தெரிவிக்கின்றன.