அம்பாறையில் உள்ள சிறிலங்கா வான்படையின் வான்குடை பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் வானில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இன்று காலை சிறிலங்கா வான்படையின் வானூர்தியில் இருந்து வான்குடை மூலம் தரையிறங்கிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
திடீரென வீசிய காற்றினால் 40 அடி உயரத்தில் இரண்டு வான்குடைகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், இருவரும் தரையில் வீழ்ந்துள்ளனர் என்று சிறிலங்கா வான்படை பேச்சாளர் குறூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில், படுகாயமடைந்த இரண்டு வான்படையினரும் அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும், விங்கொமாண்டர் தர அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில், இன்னொரு வான்படை அதிகாரி படுகாயமடைந்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.