தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கை பௌத்தமயமாக்குவதை இலக்காக வைத்து தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் அடையாளம் இருப்பதாக கூறி தொல்லியல் திணைக்களம் அகழ்வுகளை மேற்கொள்ளவுள்ள நிலையில், இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரும் தமிழ் அரசியல் தரப்புகளும் கலந்துரையாடலை மேற்கொண்ட வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் ஆலயத்தின் தொன்மைகள் தொடர்பாகவும் வரலாறுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாங்கள் அனைத்து விடயங்களிலும் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். அரசின் தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினர், பௌத்த பிக்குகள் சிலர் இங்கு வந்து சென்றுள்ளதுடன், வருகின்ற 23 ஆம் திகதி அகழ்வுகளில் ஈடுபடவுள்ளதாக அறிய முடிகின்றது.
எங்களுடைய நிலங்கள், பாரம்பரியங்கள் இருக்கின்ற தெய்வ சந்நிதிகளிலே தங்களது பௌத்த சமயத்தை நிலைநாட்டுவதற்காக தொல்லியல் திணைக்களம் எனும் குழுவை அரசு உருவாக்கியுள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தங்களது பௌத்த அடையாளங்கள் இருக்கின்றன எனக் கூறி பௌத்த விகாரைகளை நிலைநாட்ட அரசு முயற்சிக்கின்றது.
பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் இந்த ஆலயத்தை ஆராய்ச்சி செய்து பார்க்க இவர்கள் எத்தனித்துள்ளார்கள். இந்த இடத்தை இராணுவத்தினர் பல வருடங்களாக ஆளுகைக்குள் வைத்திருந்தனர். அவர்களே இந்த ஆய்வைச் செய்ய பௌத்த மதகுருமாருடன் ஆர்வமாக உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.