நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க அடிப்படை சட்டத்தேவைப்படுகள் இல்லாத நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருக்க கூடாது” என்று பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டவர்கள் தொடர்பாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் சார்பில் சமர்ப்பணம் செய்யப்பட்டது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி நடத்தப்பட்டுள்ளதுடன், அதில் பங்கேற்றதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர் என கூறி பருத்தித்துறை,நெல்லியடி காவல்துறையினர் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படக் கூடாது என கோரி மன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் தொடர்பில் காவல்துறையினரின் பதிலளிப்பு இன்று இடம்பெற்றது.
அதன் போது, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஒருவர், காவல்துறையினர் சார்பாக ஆஜராகியிருந்தர்.
தமது விண்ணப்பம் தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்ததாகவும், இதன்போது இந்த விண்ணப்பத்தை செய்தவர்களுக்கு வழக்கெழு தகமை இல்லை என்பதுடன், இந்த வழக்கில் ‘பி’ அறிக்கை மாத்திரமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டார்.
இதன்படி எவரையும் சந்தேக நபர்களாக குறிப்பிடவில்லை என்பதனால் இந்த விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து நடத்த முடியாது என அவர்களால் கேட்க முடியாது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் கூறியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பி அறிக்கையில் இருவரின் பெயர் குறிப்பிடப்பட்டு, அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை புரிந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்கள் என அவர்களை குறிக்கா விட்டாலும் இந்த நபர்கள் இந்த குற்றத்தை புரிந்துள்ளார்கள் என சொல்லப்பட்டுள்ளது என்பதால் அவர்களுக்கு வழக்கெழு தகமை இருக்கின்றது எனவும் அவர்கள் இந்த விடயத்தில் அக்கறை உள்ளவர்கள் எனும் ரீதியில் அவர்கள் விண்ணப்பம் செய்ய முடியும் என்றும் சுமந்திரன் சுட்க்காட்டியுள்ளார்.
இதேவேளை அரச தரப்பின் பூர்வாங்க ஆட்சேபனை சம்பந்தமாக மேலதிகமாக எழுத்து மூல சமர்ப்பணம் செய்வதற்கு கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து இரு தரப்பினருக்கும் 4 வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பிக்கும் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.