சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாரிய கொரோனா தொற்று கொத்தணி ஒன்று உருவாகியுள்ளது.
பேலியகொட மீன்சந்தையில் உருவாகிய கொரோனா கொத்தணி இன்னமும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில், இந்தப் புதிய கொத்தணி இனங்காணப்பட்டுள்ளது.
இங்கு பணியாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒரே தடவையில் 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆயிரத்து 200 பணியாளர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட போதே, அவர்களில் 474 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கை செயலணி தெரிவித்துள்ளது.
மேலும், 174 பணியாளர்களின் பிசிஆர் சோதனை முடிவுகள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சபுகஸ்கந்தை எண்ணெய் ஆலை கொத்தணி பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 90 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் நேற்று 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளர் காணப்பட்டுள்ளனர் என்று, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.