ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்து சுமார் ஆறு வருடங்களுக்கு பிறகு தனக்கு புற்றுநோய் இருந்ததாகவும்,அதனை முதல் கட்டத்திலேயே கண்டறிந்தமையினால் குணப்படுத்த முடிந்ததென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
‘LADY LEADER’ என்ற தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
‘நான் அரசியலில் மாத்திரம் பிரவேசித்து இருக்காவிட்டால் பணக்கார பெண்மணியாக இருந்திருப்பேன்.
இதேவேளை நானொரு உண்மையை கூற விரும்புகின்றேன். எனக்கு சில வருடங்களுக்கு முன்னர் மார்பக புற்றுநோய் இருந்தது. இவ்வாறு புற்றுநோய் ஏற்படுவதற்கு எந்ததொரு அறிகுறியும் என்னிடம் இருந்திருக்கவில்லை.
ஆனால், ஜனாதிபதி பதவி என்னிடம் இருந்து கைவிட்டுச் சென்றபோது நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டதுடன், மிகவும் தனிமையில் இருந்தேன்.
குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனது பதவிக்காலத்திற்குப் பிறகு கடுமையான மன அழுத்தத்தை எனக்கு கொடுத்திருந்தார்.
அதேநேரம் அவரது சொந்த கட்சி உறுப்பினர்களும் பல சமயங்களில் என்னை ஓரங்கட்டினர். இதுதான் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஏதுவான காரணமாக இருந்திருக்க வேண்டும்.
மேலும் ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோயை கண்டறிந்தமையினால், கதிரியக்க சிகிச்சையின் ஊடாக குணமடைந்தேன்.
அதன்பிறகு கடந்த 9 அல்லது 10 வருடங்களாக எந்தவொரு மேலதிக சிகிச்சைகளையும் நான் பெற்றுக்கொள்ளவில்லை.
தற்போது நான் மிகவும் ஆரோக்கியமாக உள்ளேன் என்று கூறவில்லை. ஆனால், எனது உடல் நலத்தில் தற்போது எந்தவொரு பிரச்சினையும் கிடையாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.