சிறிலங்காவுக்கு எதிராக ஆறு நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நடக்கவிருந்த வாக்கெடுப்பு நாளைக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மெய்நிகர் முறையில் நடக்கும் இந்தக் கூட்டத்தொடரில் இன்றும் நாளையும், பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது,
சிறிலங்கா தொடர்பாக பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இணைந்து சமர்ப்பித்துள்ள A-HRC-46-L.1 பிரேரணை முதலாவதாக பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும், எட்டு பிரேரணைகள் பேரவையில் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரேரணைகள் மீதான விவாதம் ஜெனிவா நேரப்படி இன்று பிற்பகல் தொடங்கி இடம்பெறும் என்றும், அதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜெனிவா நேரப்படி இன்றிரவு வாக்கெடுப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், சில தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளால், வாக்கெடுப்பு நாளை காலையில் இடம்பெறும், என்று ஐ.நா அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா நேரப்படி நாளை காலை 9 மணிக்கு சபை கூடும் போடும், சிறிலங்கா தொடர்பான பிரேரணை மீதே முதல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.