தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறிலங்கா தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரைக்கப்படும் என தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி இன்று ‘தொலைநோக்கு பத்திரம்’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டு வைத்திருந்தார்.
அதில், விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல் மீனவர்களுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்கப்படும், 12 இலட்சம் ஏக்கர் காணி பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியல் இன மக்களிடம் வழங்கப்படும், இந்து ஆலயங்களின் நிர்வாகம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற வாரியத்திடம் ஒப்படைக்கப்படும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். மதுபான கடைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் வேறு துறைகளில் பணி அமர்த்தப்படுவார்கள் ஆகிய விடயங்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.