புதிய அரசியலமைப்புச் சட்டத்தில், சிறிலங்கா படையினரைப் பாதுகாக்கும், வகையிலான சட்ட ஏற்பாடுகள் உள்ளடக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தை கொண்டு வந்துள்ள, பிரித்தானியா, தனது இராணுவ வீரர்களை சொந்த மண்ணில் மட்டுமன்றி, நாட்டிற்கு வெளியேயும் குற்றவியல் வழக்குகளில் இருந்து பாதுகாக்கின்ற ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.
இதுபோன்று போர் வீரர்களைப் பாதுகாக்கின்ற சட்டத்தை சிறிலங்காவிலும் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தயங்கப் போவதில்லை. இதற்கமைய படையினருக்கு எதிராக வழக்குத் தொடரவோ, தண்டனை விதிக்கவோ முடியாது. இதுதொடர்பாக புதிய அரசியலமைப்பில் ஏற்பாடுகள் உள்ளடக்கப்படும்.
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தில் அனுசரணை மற்றும் இணை அனுசரணை வழங்கியுள்ள 40 நாடுகளில் ஒரு ஆசிய நாடு கூட இடம்பெறவில்லை.
ஆபிரிக்க நாடுகளில் ஒன்று மட்டுமே தீர்மானத்துக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளது. ஏனைய நாடுகள் அனைத்தும், வட அமெரிக்க அல்லது மேற்கு ஐரோப்பிய நாடுகள் தான். எனவே இது ஒரு பூகோள விவகாரம் அல்ல என்பது உறுதியாகியுள்ளது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.