முல்லைத்தீவு –குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை உள்ளடக்கிய 400 ஏக்கர் பிரதேசத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளருக்கு, தொல்பொருள் திணைக்களத்தினால் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்த புனித பிரதேசமாக அறிவிக்கப்படுவதற்காக, தொல்பொருள் திணைக்களத்தினால் கோரப்படும், , சுமார் 150 ஏக்கர் காணிகள், தண்ணிமுறிப்பு கிராமத்தில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமாவையாகும்.
ஏனைய காணிகள், நாகஞ்சோலை வனப்பகுதியில் உள்ளடங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காணிகளை தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் இருந்தும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளுக்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தொல்பொருள் திணைக்களத்தின் இந்த திடீர் அறிவிப்பினால், அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சிடைந்துள்ளனர்.
இந்த நிலையில், எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.