சிறிலங்காவுக்கு ஆதரவான நிலையை எடுக்காமல், இந்தியா நடுநிலை வகித்திருப்பது தமிழர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காது நடுநிலை வகித்தமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், இறுதிப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி, அதில் தெரியவரும் உண்மைகளை ஆவணப்படுத்துவதற்காக பன்னாட்டு பொறிமுறை அமைக்கக் கோரும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதி பெற்றுத் தருவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court)அல்லது அதற்கு இணையான அமைப்புகளின் விசாரணைக்கு ஆணையிடுமாறு ஐ.நா.பொது அவைக்கும், ஐ.நா. பாதுகாப்பு அவைக்கும் பரிந்துரைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.