கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வின் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
குறிப்பாக, கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளினால் அங்குள்ள மக்கள் மிகவும் கோபாவேசமடைந்துள்ளனர் எனவும், கடந்த 22 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், குறித்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளில் தொல்லியல் துறையினரை விடவும் இராணுவத்தினரே அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.