மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் போது ஏழு வயது சிறுமி ஒருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மாண்டலே (Mandalay) நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருந்த போதே குறித்த சிறுமி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
மியான்மர் இராணுவத்தினர் அந்தச் சிறுமியின் தந்தையை நோக்கிச் சுட்டதாகவும், அப்போது அவரது மடியில் அமர்ந்திருந்த சிறுமி மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாகவும் மியான்மர் நவ் (Myanmar Now) என்ற உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு விரைந்து சென்ற போதும், அவரைக் காப்பாற்ற இயலவில்லை என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் 19 வயது அண்ணனும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.