சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நாட்டைக் காப்பாற்ற முடியவில்லை என்பதை, ஜெனிவாவில் ஏற்பட்ட தோல்வி உறுதிப்படுத்தியுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜேவிபியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
“ ஐ.நா.மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பில் சிறிலங்கா அடைந்த தோல்விக்கு அரசாங்கமே பொறுப்பாகும்.
அரசாங்கத்தின் பலவீனமான உள்நாட்டு அரசியல் கொள்கைவின் விளைவு தான் இந்த தோல்வி.
ஜெனிவாவில் ஏற்பட்ட தோல்வி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நாட்டைக் காப்பாற்ற முடியவில்லை என்பதை, நிரூபித்திருக்கிறது.
தோல்விக்குப் பின்னரும், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. இது ஒரு மோசமான சூழ்நிலை
அரசாங்கத்தால் ஒருபோதும் தனது தவறுகளைச் சரிசெய்து கொள்ளாமல் வெற்றிபெற முடியாது.
ராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கைகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன.
ஏனைய நாடுகளின் வாக்குகளைப் பெறத் தவறிய சூழ்நிலைக்கு நாட்டைக் கொண்டு சென்ற கோட்டாபய ராஜபக்ச தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்,“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.