இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் போன்ற தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளை நீக்கம் செய்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவை சிறிலங்காவைக் காப்பாற்றியுள்ளது என்று, வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, குறித்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“இன்றைய கால கட்டத்தில் பன்னாட்டு அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக இது இருந்தாலும், முன்னைய தீர்மானங்களை விட, வலுவற்று வெறுமனே நீர்த்துப்போன ஓர் தீர்மானமாகவே இது அமைந்துள்ளது.
இந்த தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மீண்டும் நசுக்கும் செயலாகும்.
சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்நிலையில் இருப்பவர்கள் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டும் வகையில் ஐ.நாவின் மூன்று அறிக்கைகள் உள்ளன.
முன்னாள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்கள் நால்வரும், சிறிலங்காவுக்குச் சென்று வந்த 13 முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களும், சிறிலங்கா தொடர்பான ஐ.நா பொதுச் செயலரின் வல்லுநர் குழுவில் இடம்பெற்ற 3 உறுப்பினர்களும் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பக் கோரியிருந்தார்கள்.
பாதிக்கப்பட்ட தமிழ் சமூகமும் கடந்த பல ஆண்டுகளாக இதனைத் தான் கோரி வருகின்றனர்.
மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்ற ஈழத் தமிழர்கள், அதிலிருந்து மீள்வது தொடர்பில், ஆக்கபூர்வமான ஒருங்கிணைந்த செயற்பாடுகளைப் பெரும்பாலும் முன்னெடுக்கவில்லை.
மாறாக, தங்களுக்கு இடையிலான போட்டி, பொறாமை, தனிப்பட்ட அரசியல் நலன், சுய தம்பட்டப் பேருவகை, போன்ற மனநிலையால் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த யதார்த்தம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அரங்கேறி சிங்கள தேசத்தை தப்பிக்க செய்கின்றது.” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.