கொழும்பில் உள்ள சில நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜெனிவா தீர்மானம் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்து உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
“சில நாடுகளின் தூதுவர்கள் இரகசியமான கலந்துரையாடல்களை நடத்துகின்றனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், ஆனாலும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச செய்தது போன்று அவர்களை நாடு கடத்தப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அரங்குகளில், வெளித்தரப்புகள் கூறுகின்ற எல்லாவற்றையும், ஏற்றுக் கொள்வதற்கு தாங்கள் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்ட தினேஷ் குணவர்த்தன, நாட்டுக்கு எது நல்லதோ அதனை மட்டுமே தற்போதைய அரசாங்கம் செய்யும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.