சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், தேசிய நீதிமன்றங்கள் ஊடாக சர்வதேச குற்றங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதை உறுப்பு நாடுகள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், சிறிலங்கா குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
அதில், துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றைப் பெற உதவும் வெற்றியாகும் என தெரிவித்துள்ளது.
தீர்மானத்தைக் கொண்டுவருவதற்காக பிரசாரம்செய்த செயற்பாட்டாளர்களுக்கு எதிரான எந்தவொரு பழிவாங்கலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐ.நா. மற்றும் உறுப்பு நாடுகள் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு வலியுறுத்த வேண்டும் என அந்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய மாதங்களில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக ஏராளமான அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிப்பதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியவும் பொறுப்புள்ளவர்களைக் கணக்கில்கொள்ளவும் பல ஆண்டுகளாகப் போராடி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.