ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, தகவல்கள், சாட்சியங்களை சேகரித்து, பாதுகாப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை ஐ.நா பொதுச்சபையில் தோற்கடிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான தகவல்கள், சாட்சியங்களை சேகரித்து, ஒருங்கிணைத்து, பகுப்பாய்வு செய்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை நிறைவேற்றுவதற்கு, 2.85 மில்லியன் டொலர் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதியை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நடப்பு ஆண்டுக்கான செலவினங்களில் உள்ளடக்க முடியாது என்றும் ஐ.நாவின் திட்டமிடல் செயலகம் கூறியுள்ளது.
இதனால், ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில், இதற்கான நிதியை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் கோரவுள்ளது.
இந்தநிலையில், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், ஐ.நா பொதுச்சபை அமர்வில் கோரும் போது அதனைத் தோற்கடிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் இந்த விவகாரம் எழுப்பப்படும் போது, அதனை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.