யாழ்ப்பாண நகர மத்தியை உடனடியாக தனிமைப்படுத்துவதாக அறிவித்திருந்த அரச நிர்வாகம், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யாழ்ப்பாண நகரில், நேற்று 77 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவசரமாக கூடிய மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி, நகரின் மையப் பகுதியை, 10 நாட்களுக்கு முடக்குவதற்கு தீர்மானித்திருந்தது.
இதற்கமைய, மருத்துவமனை வீதியில், வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி வரைக்கும், மின்சார நிலைய வீதியில், காங்கேசன்துறை வீதியிலிருந்து யாழ். போதனா மருத்துவமனை வரைக்கும், காங்கேசன்துறை வீதியில், சத்திரச் சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும், கஸ்தூரியார் வீதியில் வின்சர் திரையரங்கு சந்தி வரைக்கும் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நேற்றிரவு எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய இன்று அதிகாலையில் குறித்த பகுதிகளை முடக்கும் தடுப்புகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் உள்ள யாழ். மாநகர பேருந்து நிலையத்துக்கு இன்று காலை வழக்கம் போல பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன.
அப்பகுதியில் உள்ள பழக்கடைகள் உள்ளிட்டவையும் திறந்திருந்தன.
இதன் பின்னரே, சுகாதார அதிகாரிகள், சிறிலங்கா இராணுவத்தினர், காவல்துறையினர் இணைந்து பேருந்துகளை அப்புறப்படுத்தி, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அவற்றை இயங்குமாறு அறிவித்ததுடன், திறக்கப்பட்டிருந்த கடைகளையும் மூடுமாறு உத்தரவிட்டனர்.
அத்துடன், நகர மையப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
அதேவேளை வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பேருந்துகளை முடக்கப்பட்ட பகுதியில் இருந்தே இயக்கப் போவதாக நிர்வாகத்தினர் முரண்டு பிடிப்பதால், குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.