சுற்றுலா மையம் என்ற பெயரில் வவுனியா குளம், ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 8.30 மணி முதல் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்றது.
வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணியால் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்கான நிலத்தடி நீருக்கும், நீர்ப்பாசனத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் குளங்களே ஆதாரமாக உள்ள நிலையில், வவுனியாவிலுள்ள பல குளங்களும் விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு கண்முன்னேயே அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக போராட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாக்குளம் மீதான ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இல்லாவிட்டால், தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பொது அமைப்பினர், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தரப்பினர் குளத்திற்கான மக்கள் செயலணியினர், பெண்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.