இரண்டு வாரங்களுக்குள் தமக்கு 50 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என்று, சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக 50 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி, தனது சட்டத்தரணி மூலம் அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்குள் இந்த இழப்பீட்டைச் செலுத்தாவிடின், தமது கட்சிக்காரர், நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளார் என்று, நளின் பண்டாரவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேயின் சட்டத்தரணி, குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்துக்கள், முற்றிலும் பொய்யானது என்றும், அடிப்படையற்றது என்றும் சுரேஸ் சாலே குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்பை வைத்திருந்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார் என்றும், சுரேஸ் சாலே தெரிவித்துள்ளார்.