ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அரசியல் நோக்கம் கொண்டது என்று, ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
“இந்த தாக்குதல் தீவிரவாத மற்றும் அடிப்படைவாத தாக்குதல் போன்று தென்படுகின்ற போதும், இதன் விளைவுகள், தாக்குதல் நடந்த பின்னணிகளை கவனமாக ஆராயும் போது, இது அரசியல் நோக்கம் கொண்ட தாக்குதல் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த தாக்குதலுக்குப் பின்னர் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்தோ, இந்த தாக்குதலின் நோக்கம் குறித்தோ ஜனாதிபதி ஆணைக்குழு தமது அறிக்கையில் வெளிப்படுத்த தவறி விட்டது.
தாக்குதலை தடுக்கத் தவறியவர்கள் மற்றும் காரணங்கள் குறித்தே இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒரு தீவிரமான நிலைமை. இது குறித்து விசாரித்து சதி நடந்ததா என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
தாக்குதலைத் தடுப்பதில் தோல்விகளை சரிசெய்ய முடியும். இருப்பினும், சதித் திட்டம் வெளிப்படுத்தப்படாத வரை, இதுபோன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறும் அபாயம் உள்ளது” என்றும் அனுர குமார திசநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.