ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இந்தியா நடுநிலைமை வகித்தாலும்,நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் ஊடாக மிக ஆக்கபூர்வமான பணிகளை எடுத்திருக்கின்றது.இந்தியா மிகவும் தந்திரோபாயமாக அந்தத் தீர்மானத்தில் நடுநிலை வகித்திருக்கின்றது என்று தெரிவித்துள்ள இலங்கைத் தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,இந்தியா சிறந்த முறையில் எமது மக்களின் விடுதலைக்காக சர்வதேசத்தில் வேலை செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கிய ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்துக்கு இருந்தால், தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என கூட்டமைப்பின் அங்கத்தவர்களாலும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
அதற்கான ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும். அரசாங்கம் அதற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.அவ்வாறு அழைப்பு விடுக்கும்பட்சத்தில் அதனை அடிப்படையாகக் கொண்டு நாங்களும் பேச்சுவார்த்தை நடாத்துவோம். அதற்கான பிரேரணைகளும் ஏற்கனவே எங்களால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
இலங்கை நாட்டினுடைய அதி முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தியிருக்கிறது.அந்த வகையில் எங்களுடைய நாட்டின் இனப்பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச ரீதியிலும் அடித்தளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் இந்த அரசாங்கம் தயார் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கும் தயாராக இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் முன்னரை விட பல முன்னேற்றம் உள்ளதாக இருக்கின்றது.பொறுப்புக் கூறல் விடயம் எவ்வாறு நிலைநாட்டப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அதேபோல்,குற்றதமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்ல,முதன் முறையாக இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
எனவே இந்த நாட்டில் தமிழர்களுக்கான விடுதலையை பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும் சர்வதேசத்தின் ஏனைய சக்திகள் அனைத்தும் ஒரு கட்டமைப்பாகச் செயற்பட வேண்டு இந்த போராட்டத்தை முன்கொண்டு செல்லவேண்டும். தேர்தலைத் தாண்டி இனப்பிரச்சினையை தீர்க்கக் கூடிய ஒரு சிறந்த கட்டமைப்பை எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாக உருவாக்க வேண்டும்.