ஈஸ்டர் தாக்குதலை மேற்கொள்ள 2018 இல் இடம்பெற்ற 52 நாள் அரசியல் சதித்திட்டம் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில்தான் ஈஸ்டர் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சஹ்ரானுக்கும் இந்த அரசாங்கத்துக்குமிருந்த தொடர்பு வெளிப்பட்டு வருகிறது. புலனாய்வுத் தகவல்களை வழங்குவதற்காக சஹ்ரானுக்கு நாங்கள்தான் சம்பளம் வழங்கியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொலைக்காட்சி உரையாடல் ஒன்றின்போது பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அப்படியெனில் 2014க்கு முன்னர் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
மேலும், ஈஸ்டர் தாக்குதலை மேற்கொள்ள 2018 இல் இடம்பெற்ற 52 நாள் அரசியல் சதித்திட்டம் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில்தான் ஈஸ்டர் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
2018 இல் தான் வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்டனர். அதனை புலிகளின் மீது சுமத்தி மறைக்க முற்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாவனெல்லையில் புத்தர் சிலை சேதப்படுத்திய சம்பவமும் 2018 இல் தான் இடம்பெற்றது.
அதேபோல, சஹ்ரானின் நடவடிக்கையின் மோசமான நிலையை உணர்ந்து கொண்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா, அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தபோது, நாமல் குமார என்ற ஒருவர் திடீரென ஊடகங்களுக்கு முன்வந்து மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதித்திட்டம் இடம்பெறுகின்றதென்ற நாடகத்தை மேற்கொண்டார். இவற்றை மறந்து விட முடியாது என்றார்.