சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள 400 மீட்டர் நீளமான இராட்சத சரக்கு கப்பலை அகற்றும் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இழுவைபடகுகளை கொண்டு கப்பலை நகர்த்த மேற்கொண்ட முயற்சியின் போது, கப்பல் சிறியளவில் நகர ஆரம்பித்துள்ளது.
எனினும், கப்பல் மீண்டும் எப்போது மிதக்கும் என்பதைக் கூற முடியாது என்று சூயஸ் கால்வாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அகழ்வு இயந்திரங்கள் மற்றும் இழுவைப் படகுகளை வைத்து கப்பலை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
கப்பலின் அடியில் சேர்ந்துள்ள மணலை அகற்றும் போது கப்பல் அசையத் தொடங்கினாலும், அலைகள் அதிகரிப்பால் பணிகளை வேகமாக முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த முயற்சி அடுத்த வாரத்திற்குள் வெற்றியடையவில்லை என்றால் கப்பலின் முன் பகுதியிலிருந்து 600 கொள்கலன்களை அகற்றி எடையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூயஸ் கால்வாய் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.