ஜேர்மனியில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜேர்மனி அரசாங்கத்திடம், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஜேர்மனி அரசாங்கத்திற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், “புகலிடக் கோரிக்கையாளர்களான பெருமளவு தமிழர்களை மார்ச் 30 ம் நாள் கொழும்புக்கு நாடு கடத்துவதற்கு ஜேர்மனி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிந்து நாங்கள் பெரும் மனக்கலக்கம் அடைந்துள்ளோம்.
ஜேர்மனியில் உள்ள தமிழ் சமூகத்திற்கு இது ஏற்படுத்தக் கூடிய வேதனை அச்சங்களிற்கு அப்பால், சிறிலங்காவில் இடம்பெற்ற, இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காண்பதற்கான சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் மீதும் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மனித உரிமை மீறல்களில் சிறிலங்கா ஈடுபட்டதாக தெரிவிக்கும் தீர்மானத்திற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஜேர்மனி இணை அனுசரணை வழங்கிய ஒரு வார காலத்திற்குள், புகலிடக் கோரிக்கையாளர்களை அந்த அரசாங்கத்தின் கரங்களில் ஒப்படைப்பதற்கு ஜேர்மனி முயல்வது முற்றிலும் எதிர்மாறான செய்தியை தெரிவிப்பதாக அமையும்.
புகலிடக் கோரிக்கையாளர்களின் உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த தவறான முடிவை உடனடியாக மீள் பரிசீலனை செய்யுமாறு கோருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.